நகராட்சிக் கடைக்கு "சீல்' வைக்கச் சென்றபோது துப்புரவுப் பணியாளர்களை தாக்கியதாக புகார்: நடவடிக்கை கோரி போராட்டம்
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள வணிக வளாக கட்டடங்களில் வாடகை வசூல் செய்ய சென்ற போது, கடை வாடகைதாரர் துப்புரவுப்
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள வணிக வளாக கட்டடங்களில் வாடகை வசூல் செய்ய சென்ற போது, கடை வாடகைதாரர் துப்புரவுப் பணியாளர்களை தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நகராட்சி முன் துப்புரவுப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர் .
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் உள்பட பழைய பேருந்து நிலையம், தினசரி மார்க்கெட், நாமக்கல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான வணிக கட்டடங்கள் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் கடைகளுக்கான வாடகை தொகையை 400 சதவீதம் வரை உயர்த்தியது. இதற்கு வாடகைதாரர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் கடந்த ஒராண்டாக வாடகை செலுத்தாமல், வாடகையை குறைக்க வேண்டுமென வாடகைதாரர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் வாடகையை குறைக்காமல், வாடகை செலுத்தாத கடைக்கு சீல் வைக்க ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், நகராட்சி ஊழியர்கள் முடிவு செய்தனர். இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர்.
அப்போது, நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கும், வாடகை ஒப்பந்ததாரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாடகைக்கு இருக்கும் தங்கப்பனுக்கும், துப்புரவுப் பணியாளர் ஒருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, துப்புரவுத் தொழிலாளர் மீது தங்கப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்: நகராட்சி துப்புரவாளர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, துப்புரவாளர்கள் தூய்மைப் பணியை கைவிட்டு, நகராட்சி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.