பாவை கல்வி நிறுவனங்களின்13-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
பொறியியல் துறையில் சாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை பொறியியல் பட்டதாரி மாணவர்கள் நிரூபித்துக் காட்ட
பொறியியல் துறையில் சாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை பொறியியல் பட்டதாரி மாணவர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும் என பாவை கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் எம். முருகேசன் வேலாயுதம் பேசினார்.
பாவை கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு 13 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி. நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கைநடராஜன் குத்துவிளக்கேற்றினார். பாவை காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் ஜெ. சுந்தரராஜன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் முனைவர் எம். முருகேசன் வேலாயுதம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மேலும் பேசியது:
சமீப காலமாக பொறியியல் படிப்புக்கு மதிப்பு இல்லை என்ற தவறான கூற்று சமூகத்தில் பரவலாகப் பரவி வருகிறது. பொறியியல் பட்டதாரிகளான நீங்கள், அக்கூற்று தவறு என்பதை சமூகத்துக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும். சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் கொடுக்கும் வகையில் செயல்பட்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
விழாவில் பங்கேற்ற 1,082 பட்டதாரி மாணவ, மாணவியருக்கு பட்டம் மற்றும் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 27 மாணவர்களுக்கு தங்க நாணயமும், துறை அளவில் முதல் இரண்டு ரேங்குகளைப் பெற்ற மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கல்வி நிறுவன துணைத் தலைவர் டி.ஆர். மணிசேகரன், செயலாளர் டி.ஆர். பழனிவேல், இயக்குநர் - (நிர்வாகம்) கே.கே.இராமசாமி, இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், இயக்குநர் (வேலைவாய்ப்பு )- எஸ்.சீனிவாசன் உள்ளிட்ட கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.