நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் மூடல்
டாஸ்மாக் கடைகளில் விற்பனையான பணத்தை ஊழியர்கள் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு மணி நேரம் கடைகள் மூடப்பட்டன.
டாஸ்மாக் கடைகளில் விற்பனையான பணத்தை ஊழியர்கள் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு மணி நேரம் கடைகள் மூடப்பட்டன.
அண்மையில் வேலகவுண்டம்பட்டி டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் விற்பனை செய்த வகையில் மூன்று லட்சத்தை எடுத்துக்கொண்டு மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர், உதவியாளர் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் அவர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கூட்டுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் பணத்தை வங்கி ஊழியர்களே நேரடியாக வசூல் செய்து செல்ல வேண்டும்.
விற்பனையாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும், கரோனாவால் இறந்த டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், வேலகவுண்டம்பட்டி சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி செவ்வாய்க்கிழமை அன்று மாவட்டத்திலுள்ள சுமார் 190 கடைகள் மூடப்பட்டன. இதனால் காலையிலேயே மது வாங்க வந்த மது குடிப்போர் ஏமாற்றம் அடைந்தனர். சாலைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பலர் அங்கேயே காத்திருந்தனர்.