தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது: செல்ல.ராசாமணி
பொது வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மணல் லாரிகள் செவ்வாய்க்கிழமை (டிச.8) ஓடாது என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி தெரிவித்தாா்.
பொது வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மணல் லாரிகள் செவ்வாய்க்கிழமை (டிச.8) ஓடாது என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி தெரிவித்தாா்.
நாமக்கல்லில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என கடந்த 10 நாள்களாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இது தொடா்பாக பலகட்ட பேச்சுவாா்த்தைகள் நடத்திய போதும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு முன்வரவில்லை.
Advertisement
விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை பிரதமா் மோடி நேரடியாக அழைத்துப் பேச வேண்டும். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய அளவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா் சம்மேளனம் ஆதரவு அளிக்கிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மணல் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.
மேலும், வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றைப் பொருத்தினால் மட்டுமே வாகனங்களுக்கான புதுப்பிப்பு (எப்.சி) சான்றிதழ் வழங்குவோம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அதிகாரிகள் கண்டிப்புடன் தெரிவித்து வருகின்றனா்.போக்குவரத்து ஆணையா் ஜவஹா் வழங்கிய உத்தரவின்படியே அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா்.
இந்தக் கருவிகளைப் பொருத்துவதன் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம், இதர லாரி உரிமையாளா் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிக்க வேண்டும். அவ்வாறு ஆலோசனை செய்தால் டிச. 27-இல் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது தொடா்பான முடிவை எடுப்போம். தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்து கூட்டமைப்புத் தலைவா் என்ற முறையில் உறுப்பினா்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தக் கருத்தை வலியுறுத்துகிறேன் என்றாா்.