தென்மேற்கு பருவமழை தொடக்கம்: முட்டை விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை தொடக்கம், உற்பத்தி சரிவு போன்றவற்றால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 35 காசுகள் உயர்ந்து ரூ.4.25–ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்: தென்மேற்கு பருவமழை தொடக்கம், உற்பத்தி சரிவு போன்றவற்றால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 35 காசுகள் உயர்ந்து ரூ.4.25–ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல், பொது முடக்கத்தால் முட்டை தொழில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. தேவையற்ற வதந்திகளால் முட்டை வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக சரிந்தது. இதனால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு முட்டை என விற்பனை செய்யும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டனர். அதன்பின் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகளால் ஓரளவு சரிவில் இருந்து முட்டை தொழில் மீண்டது. பல்வேறு பகுதிகளிலும் முட்டை நுகர்வு அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் விலை உயர்வதும், சரிவதுமாக இருந்தது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 5, 10 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு முட்டை விலை ரூ.3.90–ஐ எட்டியது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை 30, 40 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி, பண்ணைகளில் கோழிகள் விடுவது குறைந்ததால் முட்டை உற்பத்தி சரிந்தது. மக்களிடையே நுகர்வு அதிகரித்த நிலையில், உற்பத்தி சரிவால் முட்டை விலையை உயர்த்தும் முடிவை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில்,ைஹதராபாத், பார்வாலா, விஜயவாடா உள்ளிட்ட மண்டலங்களில் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில், நாமக்கல் மண்டலத்திலும் விலையை உயர்த்தலாம் என பண்ணையாளர்கள் வலியுறுத்தினர். அதன்படி முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 35 காசுகள் உயர்வுடன் ரூ.4.25–ஆக நிர்ணயிக்கப்பட்டது. வரும் நாள்களில் உணவகங்கள், விடுதிகள், பள்ளிகள் திறக்கப்படும்பட்சத்தில் முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியது; நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகி வந்தன. கரோனா அச்சத்தால் சில மாதங்களுக்கு முன் பண்ணைகளில் குஞ்சுகள் விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் மொத்த உற்பத்தியில் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரையில் உற்பத்தி குறைந்தது. தற்போது 3.50 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தியாகின்றன. ஒரு முட்டை விலை ரூ.4.25–ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு போதாது. தற்போது உற்பத்தி செலவு ரூ.4–க்கும் மேல் ஆகிறது. உணவகங்கள் திறக்கப்பட்டால் முட்டை தேவை அதிகரிக்கும்.
அதனால் விலை உயர்வு என்பது இனி தொடர்ந்து இருக்கும். மற்ற மண்டலங்களிலும் விலை உயர்வானது தினசரி அமல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களிடம் முட்டை நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், அதனை ஈடு செய்யும் வகையில் போதிய உற்பத்தி இல்லாததால் விலை உயர்வானது தவிர்க்க முடியாததாகியுள்ளது என்றார். பிற மண்டலங்களின் முட்டை விலை விவரம்காசுகளில்: ஹைதராபாத்–401, விஜயவாடா–401, பார்வாலா–422, ஹோஸ்பெட்–390, மைசூரு–434, சென்னை–450, மும்பை–430, பெங்களூரு–425, கொல்கத்தா–455, தில்லி–421.
இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி கிலோ ரூ.10 அதிகரித்து ரூ.103–ஆக உயர்த்தப்பட்டது. கேரள மாநிலத்தில் முட்டைக் கோழிகள் அதிகளவில் விற்பனையாவதால் இந்த விலை உயர்வானது அமல்படுத்தப்பட்டுள்ளது. கறிக்கோழி விலை எவ்வித மாற்றமுமின்றி கிலோ ரூ.133–இல் நீடிக்கிறது.