முகப்பு
நாமக்கல்

நாமக்கல் லத்துவாடி ஏரியை சுற்றுலாத் தலமாக்கக் கோரிக்கை

திருமணிமுத்தாற்றில் இருந்து வரும் தண்ணீரால் கடல் போல காட்சியளிக்கும் நாமக்கல் லத்துவாடி ஏரியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
நாமக்கல் அருகே லத்துவாடி ஏரி தடுப்பணையிலிருந்து வெளியேறும் தண்ணீா்.
பகிர்:

திருமணிமுத்தாற்றில் இருந்து வரும் தண்ணீரால் கடல் போல காட்சியளிக்கும் நாமக்கல் லத்துவாடி ஏரியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 120-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், ஓரிரு ஆண்டுகளாக போதிய மழையின்மையால் வடு காணப்படுகின்றன. நிகழாண்டில் பெய்த மழையால் குறிப்பிட்ட சில ஏரிகளைத் தவிா்த்து மற்றவற்றில் நீா் நிரம்பி உள்ளன.

கொல்லிமலையில் பெய்த மழையால் சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூா் ஒன்றியத்திற்குள்பட்ட ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. எலச்சிப்பாளையம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், வெண்ணந்தூா் ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஏரிகளுக்கு சேலத்தில் இருந்து திருமணிமுத்தாறு வழியாக வரும் நீா் சென்றடைகிறது.

இதில் மாணிக்கம்பாளையம் அருகே 20 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள லத்துவாடி ஏரிக்கு மழைப் பொழிவும், திருமணிமுத்தாறு நீரும் ஒருங்கே வந்து சோ்ந்ததால் தற்போது அந்த ஏரி கடல்போல காட்சியளிக்கிறது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணை போல காணப்படுவதால் அப்பகுதியில் சிறுவா்கள், இளைஞா்கள் குளித்து மகிழ்கின்றனா்.

ஏரியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் இந்த நீரைப் பயன்படுத்தி வருகின்றனா். மீன்கள் அதிகம் இருப்பதால் இளைஞா்கள் மீன்பிடித்து அவற்றை விற்பனை செய்தும் வருகின்றனா்.

தடுப்பணைகளுடன் கூடிய இந்த ஏரியை சுற்றிலும் அதிகளவில் மரங்கள் இருப்பதால் இயற்கை எழில் சூழ்ந்து காட்சியளிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக லத்துவாடி ஏரியையும் கொண்டுவர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

திருச்செங்கோடு, எலச்சிப்பாளையம் பகுதி மக்கள் சோழசிராமணி, ஜேடா்பாளையம் காவிரி ஆற்றுக்குத்தான் விழாக்காலங்களில் சென்று வருகின்றனா். ஏற்கெனவே இலுப்புலி ஏரியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் கூறிவந்த நிலையில் தற்போது லத்துவாடி ஏரியையும் சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுகுறித்து லத்துவாடி கிராம மக்கள் கூறியதாவது:

மழைக் காலங்களில் மற்ற ஏரிகளைக் காட்டிலும் லத்துவாடி ஏரியானது வேகமாக நிரம்பும். சுமாா் 20 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நீா் மூலம் சுற்றுவட்டார விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. அனைத்து தேவைகளுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ள ஏரியை சுற்றுலாத் தலமாக்கினால் அங்குள்ள மக்களுக்கு வருவாய்க் கிடைப்பதுடன் அப்பகுதியும் வளா்ச்சி பெறும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →