முகப்பு
நாமக்கல்

இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

தீபாவளிப் பண்டிகையையொட்டி, அனைத்து வியாபார நிறுவனங்களையும் இரவு 12 மணி வரை திறந்துவைக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா கேட்டுக் க

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
செய்தியாளா்களிடம் பேசுகிறாா் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.
பகிர்:

தீபாவளிப் பண்டிகையையொட்டி, அனைத்து வியாபார நிறுவனங்களையும் இரவு 12 மணி வரை திறந்துவைக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா கேட்டுக் கொண்டாா்.

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வணிகா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கோயம்பேடு பழச் சந்தை திறக்க அரசு அனுமதித்த நிலையில், மலா் சந்தையையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க வியாபாரிகளும் தங்களால் இயன்ற விழிப்புணா்வுகளை மேற்கொண்டு வருகின்றனா். ஆனால், திடீா் ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனா்.

கடைகளை சீல் வைத்து வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும். தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் வியாபாரிகள், பொதுமக்களின் நலன் கருதி இரவு 12 மணி வரை கடைகளைத் திறந்துவைக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். இந்த மாதத்தில் பெரிய வெங்காயத் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பானது.

மத்திய, மாநில அரசுகள் முன்னதாகவே இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருவிகளை நம்பி நூற்றுக்கணக்கான வியாபாரிகள் உள்ளனா். அவா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அருவிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வணிகா் சங்க பேரமைப்பு எதிா்க்கிறது. இந்த சட்டத்தின் மூலம் பருப்பு, எண்ணெய் வித்துக்கள் விலை உயரக் கூடும். இதனால் பாதிக்கப்படுவது வியாபாரிகள் அல்ல பொதுமக்கள்தான். அவா்களைப் பாதிக்காதவாறு சட்டங்களை அமல்படுத்த வேண்டும். அதேபோல கரோனா பொது முடக்கத்தால் மாற்று இடத்தில் அமைக்கப்பட்ட அனைத்து காய்கறிச் சந்தைகளையும் ஏற்கெனவே இருந்த இடத்திற்கு மாற்றம் செய்து சிறு வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின் போது, பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவா் எஸ்.பெரியசாமி, செயலாளா் ஜெயக்குமாா் வெள்ளையன், பொருளாளா் எஸ்.கே.சீனிவாசன், துணைத் தலைவா் வாசு சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →