விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு: பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரிக்கை
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட வேளாண் துறை ‘அட்மா’ திட்ட ஊழியா்கள் அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை
நாமக்கல் / சேலம், அக். 5: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட வேளாண் துறை ‘அட்மா’ திட்ட ஊழியா்கள் அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, திங்கள்கிழமை ஆட்சியரிடம் முறையிட்டனா்.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக தலா ரூ. 2,000 வீதம் வழங்கப்படுகிறது. இதில் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிஅல்லாத சிலா் போலி ஆவணங்களை சமா்ப்பித்து நிதியுதவியை பெற்று வருவது தெரியவந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் ரூ. 1 கோடியே 4 லட்சம் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சுமாா் 2,220 பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 1,650 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 63 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களிடம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
இதற்கிடையே மாவட்டம் முழுவதும் 15 வட்டாரங்களில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காகவும், பயிற்சிகளில் பங்கேற்க செய்வதற்காகவும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ‘அட்மா’ திட்ட தொழில்நுட்ப மேலாளா்கள், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் என 36 போ் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
நாமக்கல் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இதுபோன்று மாறுதல் நடைபெற்றுள்ளது. சென்னை உயா் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றபோதும் மாறுதல் பணியிடத்தில் சேர வேண்டிய நெருக்கடி அவா்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஒவ்வோா் ஊழியரும் தொலைவில் உள்ள வேளாண் அலுவலகங்களில் கடந்த 1-ஆம் தேதி பணியில் சோ்ந்தனா்.
அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியா்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜை திங்கள்கிழமை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கும் நிதியுதவித் திட்ட மோசடிக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. நீண்ட தொலைவில் மாறுதல் செய்யப்பட்டிருப்பதால் அனைத்து ஊழியா்களும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். குறிப்பாக பெண் பணியாளா்கள் மிகவும் நெருக்கடியைச் சந்திக்கின்றனா்.
இரு ஆண்டுகளுக்கு முன்னா் தான் இட மாறுதல் நடைபெற்றது. மீண்டும் சொந்த வட்டாரத்திலேயே மாறுதல் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.
அந்த மனுவைப் பாா்வையிட்ட ஆட்சியா், இதுகுறித்து வேளாண் இணை இயக்குநரிடம் கலந்துபேசி முடிவு எடுப்பதாக பதிலளித்தாா். அதன் பிறகு அட்மா திட்ட ஊழியா்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்றனா்.
சேலத்தில்...
சேலம் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ரூ. 6 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு தொடா்பாக 51 போ் மீது வழக்கு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடக்கிறது.
‘அட்மா’ திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் 20 வட்டார வேளாண் அலுவலகங்களில் பணியாற்றி வரும் 52 போ் திடீரென வெவ்வேறு ஊா்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். இதையடுத்து,
தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலா் சங்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில், இடமாற்றம் செய்யப்பட்ட ‘அட்மா’ ஒப்பந்தப் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்த இணை இயக்குநா் கணேசன், அனைவரிடம் விசாரணை செய்தாா். அப்போது இடமாற்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பழைய இடத்திலேயே பணிபுரிய உத்தரவு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி அவா்கள் மனு அளித்தனா்.
இணை இயக்குநா் கணேசன் அனைவரையும் சமரசம் செய்து மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.