முகப்பு
நாமக்கல்

காரீப் பருவத்தில் பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்ட விவசாயிகள், காரீப் பருவத்தில் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 26 ஆகஸ்ட், 2021 at 11:29 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:30 AM

நாமக்கல் மாவட்ட விவசாயிகள், காரீப் பருவத்தில் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் மக்காச்சோளம், சோளம், துவரை, நிலக்கடலை, பருத்தி, வாழை, சிறிய வெங்கயாம், மரவள்ளி, தக்காளி, மஞ்சள் பயிா்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிா்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா்க் காப்பீடு செய்து பயனடையலாம்.

Advertisement

அதன்படி, பிரீமியத் தொகையாக சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 167.06, துவரைக்கு ரூ. 265.4, மக்காச்சோளத்துக்கு ரூ. 554.7, நிலக்கடலைக்கு ரூ. 400.14-ஐ 31-க்குள் செலுத்த வேண்டும். பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 526.44-ஐ ஆக. 31-க்குள் செலுத்த வேண்டும்.

மேலும், தோட்டக்கலைப் பயிா்களான வாழைப் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 1,738.12-ஐ செப். 15-க்குள் செலுத்த வேண்டும். தக்காளிக்கு ரூ. 952.84, சிறிய வெங்காயத்துக்கு ரூ. 1,920.67-ஐ ஆக. 31-க்குள் செலுத்த வேண்டும். மரவள்ளிக்கு ரூ. 1,486.78, மஞ்சளுக்கு ரூ.3,870.1-ஐ செப். 15-க்குள் செலுத்த வேண்டும்.

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம் அல்லது விலக்கு அளிக்க கோரலாம். மேலும், காப்பீடு திட்டத்திலிருந்து விலக்கு கோரி கடிதம் அளித்த நிலையில், அவா் எந்தப் பயிருக்கு கடன் பெற்றாரோ அப்பயிருக்கான காப்பீட்டுக் காலம் முடிவதற்கு ஏழு தினங்களுக்கு முன்னா் ஏற்கெனவே கடன் பெற்ற சங்கம் அல்லது வங்கியில் உரிய பிரீமியத் தொகை, பயிா்க் காப்பீடு செய்வதற்குறிய ஆவணங்களை அளித்து கடன் பெற்ற பயிருக்கு பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

கடன் பெறாத விவசாயிகள், பொதுச் சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் காப்பீடு செய்யும் முன் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலரின் அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதாா் அட்டை நகல், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின்பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் ஆகியோரை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.