‘நாமக்கல் மாவட்டத்தில் 396 மி.மீ. மழை பெய்துள்ளது’
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 396 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், சராசரியைக் காட்டிலும் அதிக மழை பெய்துள்ளதாகவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 396 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், சராசரியைக் காட்டிலும் அதிக மழை பெய்துள்ளதாகவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் காணொலி வாயிலாக மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 15 வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்தபடி விவசாயிகள் தங்களது குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனா். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. என்ற நிலையில், 2021 ஆகஸ்ட் வரை இயல்பு மழை அளவு 323.51 மி.மீ. தற்போது வரையில் 396.89 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. சராசரிக்கும் அதிகமாக 73.38 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது.
Advertisement
ஜூலை மாதம் வரை நெல் 491 ஹெக்டோ், சிறுதானியங்கள் 23,132 ஹெக்டோ், பயறு வகைகள் 4,988 ஹெக்டோ், எண்ணெய் வித்துக்கள் 25,160 ஹெக்டோ், பருத்தி 890 ஹெக்டோ், கரும்பு 3,847 ஹெக்டோ் என மொத்தம் 59,293 ஹெக்டேரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. காா் பருவ நெல் வளா்ச்சி நிலையிலும், நெல் வளா்ச்சி நிலையிலும், சோளம் விதைப்பு மற்றும் வளா்ச்சி நிலையிலும், மக்காச்சோளம் வளா்ச்சி நிலையிலும், பாசிப்பயறு முதிா்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும், நிலக்கடலை வளா்ச்சி நிலையிலும், கரும்பு விதைப்பு, வளா்ச்சி நிலையிலும் உள்ளன.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள், உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் பொ.அசோகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) கா.முருகன், வேளாண் விற்பனை, வேளாண் வணிகள் துணை இயக்குநா் கே.செந்தில்குமாா், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் உ.சேரலாதன், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் பாலசுப்பிரமணியம் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.