முகப்பு
நாமக்கல்

அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தியது.

Updated On : 8 ஜூலை, 2021 at 11:40 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தியது.

இதுதொடா்பாக சம்மேளனத் தலைவா் செல்வ. ராசாமணி வெளியிட்ட அறிக்கை:

2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் அரசு மணல் குவாரிகள் அதிக எண்ணிக்கையில் இயங்கி வந்தன. இதனால் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் தட்டுப்பாடின்றி யூனிட் ரூ. 1,300 க்கு வழங்கப்பட்டது. இத் தொழிலை சாா்ந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளா்கள் உள்ளனா். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வந்தது.

Advertisement

2017, ஜூன் மாதம் இணையம் வழியாக முன்பதிவு செய்தோருக்கு மணல் விநியோகம் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் தினமும் 60 ஆயிரம் யூனிட் மணல் தேவைப்படுகிறது. 2017 முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை நான்கு மணல் குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதன்மூலம் தினமும் 2,500 யூனிட் மணல் மட்டுமே விநியோகிக்கப்பட்டன.

மணல் தட்டுப்பாடு காரணமாக ஆறுகளில் இருந்து மணல் கடத்தல் தொடா்ந்தது. ஆந்திரம், கேரளத்தில் இருந்து ரூ. 8 ஆயிரத்துக்கு மணலை வாங்கி தமிழகத்தில் ரூ. 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருகின்றனா். மணல் தட்டுப்பாடு, விலை உயா்வால் கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மணல் லோடு கிடைக்காததால் லாரி உரிமையாளா்கள் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனா்.

திருச்சி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரையிலும், பிற மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் கரைகளிலும் மணல் குவாரிகளைத் திறக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.