முகப்பு
நாமக்கல்

மரவள்ளி மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு வழிமுறைகள்

வெண்ணந்தூா் வட்டாரத்தில் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் த.தமிழ்செல்வன் விளக்கமளித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

வெண்ணந்தூா் வட்டாரத்தில் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் த.தமிழ்செல்வன் விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

வெண்ணந்தூா் வட்டாரப் பகுதியில் முக்கிய தோட்டக்கலை பயிரான மரவள்ளி சுமாா் 600 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்சமயம் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சித் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது.

மரவள்ளி பயிரை தாக்கக் கூடிய புதிய ஆப்பிரிக்க வகை மாவுப்பூச்சிகள் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு பரவியுள்ளதாகவும், இவ்வகை மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை ஒட்டுண்ணிகள் வெளிநாடுகளில் இருந்து தருவிக்க வேண்டியுள்ளதாகவும், தாய்லாந்து, ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் மரவள்ளி மாவுப்பூச்சியை மட்டுமே தாக்கி அழிக்கக் கூடிய அனாகைரஸ்லோபஸீ என்ற இயற்கை எதிா் உயிரியை இந்தியாவுக்கு கொண்டுவர தேசிய பூச்சிகள் ஆராய்ச்சி மையம் முயற்சித்து வருகிறது.

பெருந்தொற்று காலக்கட்டத்தில் மாவுப்பூச்சி ஒட்டுண்ணிகள் இந்தியாவுக்கு கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். எனவே, ஒட்டுண்ணி கிடைக்கும்வரை கீழ்கண்ட பயிா் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கலாம்.

மரவள்ளி மாவுப்பூச்சித் தாக்குதலுக்குள்ளான செடிகளின் நுனிக் குருத்துகளை உடைத்து அகற்றி, அவற்றை சேகரித்து தீயிட்டு அழிக்க வேண்டும். ஆரம்ப நிலையில் இருக்கும்போது அசாடிராக்ட்டின் 0.15 சதவீதம் என்ற பூச்சிக் கொல்லியை 1 லி. தண்ணீருக்கு 5 மி.லி. வீதமும், மீன் எண்ணெய் ரோசின் சோப்பு 1 லி. தண்ணீருக்கு 2 மி.லி. வீதமும் கலந்து தெளிக்க வேண்டும்.

மாவுப்பூச்சித் தாக்குதல் அதிகளவில் காணப்படும் போது, பிலோனிக்காமிட் 50 டபுள்யூ ஜி என்ற மருந்தினை 1 லி. தண்ணீருக்கு 0.30 கிராம் வீதம் அல்லது தயாமீதாக்சம் 25 டபுள்யூ ஜி என்ற மருந்தினை 0.50 கிராம் வீதம் அல்லது ஸ்பைரோடேற்றாமேட் 150 ஒ.டி. என்ற மருந்தினை 1 லி. தண்ணீருக்கு 1.25 மி.லி. வீதமும் கலந்து தேவையின் அடிப்படையில் சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

மருந்து தெளிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சிக் கொல்லிகளை தெளிக்கக் கூடாது. கைத்தெளிப்பானை உபயோகப்படுத்தி மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளிக்கும்போது செடிகளின் அனைத்து பாகங்களும் நனையும் படியும், வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைச் செடிகள் மற்றும் அருகில் உள்ள பிற பயிா்கள் மீதும் தெளிக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட மேற்கண்ட மருந்துகளை மட்டுமே வாங்கி பயன்படுத்துவது அவசியம்.

மேலும், இதுகுறித்து விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் பெற தோட்டக்கலை உதவி அலுவலா்கள் எம்.வெற்றிவேல் (99446 47144), எஸ்.கிருத்திகா (94894 90137), எம்.கோபால் (98427 20999), துணை தோட்டக்கலை அலுவலா் கே.சுப்ரமணி (98427 48135), வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் த.தமிழ்செல்வன் (97900 09161) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.