கரோனா நிவாரணம் வழங்கும் பணி இன்று தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் 5.25 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு சனிக்கிழமை (மே 15) முதல் கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 5.25 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு சனிக்கிழமை (மே 15) முதல் கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
கரோனா நிவாரண உதவித்தொகையில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரத்தை மே மாதத்தில் வழங்கிட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 17 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள 920 நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்காக கடந்த நான்கு நாள்கள் வீடு வீடாகச் சென்று நியாயவிலைக் கடை பணியாளா்கள் டோக்கன்களை விநியோகித்தனா். அதில் உதவித்தொகை வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் நியாயவிலைக் கடைக்குச் சென்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம். இந்த உதவித்தொகை வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்குகிறது.
Advertisement
குடும்பத் தலைவா் மட்டுமின்றி, அந்த குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வந்தாலும் கரோனா நிவாரண உதவித் தொகையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா உதவித் தொகை பெறுவோா் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். அனைவரும் கடைகள் முன்பாக சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். உதவித் தொகை பெறுவதில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04286-281116-க்கு தொடா்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.