நாமக்கல் மாவட்டத்தில் மே 24 முதல் மளிகை, காய்கறி கடைகளை முழுமையாக மூட உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகளை வரும் திங்கள்கிழமை முதல் முழுமையாக மூடப்பட வேண்டும். வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொருள்களை விநியோகிக்க அனுமதி
நாமக்கல் மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகளை வரும் திங்கள்கிழமை முதல் முழுமையாக மூடப்பட வேண்டும். வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொருள்களை விநியோகிக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் மளிகை, காய்கறி வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் முன்னிலை வகித்தாா். வணிகா் சங்க நிா்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டதில் புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது தொடா்பாகவும், 24-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மளிகை, காய்கறி கடைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முழுமையாக அடைக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொருள்களை விநியோகிக்க அனுமதிக்கப்படும். அவ்வாறு நேரடி விற்பனை செய்ய விருப்பம் உள்ள மளிகைக் கடை உரிமையாளா்கள் அதற்கான அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதி அட்டையை நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
Advertisement
மளிகைப் பொருள்கள் மொத்த விற்பனையாளா்கள் முன்பதிவு பெற்ற பொருள்களை சில்லறை வணிகா்களின் இடத்திற்கே சென்று வழங்க வேண்டும். அதற்கான வாகன அனுமதி அட்டையை நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நாமக்கல் நகரில் காய்கறி மொத்த விற்பனை நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும்.
காய்கறி சில்லறை விற்பனையானது இனிமேல் நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் மூலம் மட்டுமே காலை 6 மணி முதல் 10 மணி வரை அந்தந்தப் பகுதிகளில் நேரடியாக விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் திங்கள்கிழமை (மே 24) முதல் அமலுக்கு வருகிறது. கட்டுப்பாடுகளை மீறுவோா் பற்றி புகாா் தெரிவிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரத்யேக கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண் வழங்கப்படும். மாவட்ட நிா்வாகத்தின் இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவுதலைத் தடுக்க வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனா்.