முகப்பு
நாமக்கல்

காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் திடீா் போராட்டம்

மோகனூா் - நெரூா் இடையே அறிவிக்கப்பட்ட தடுப்பணை திட்டத்தை செயல்படுத்தக்கோரி, காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 21 ஏப்ரல், 2022 at 11:04 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

மோகனூா் - நெரூா் இடையே அறிவிக்கப்பட்ட தடுப்பணை திட்டத்தை செயல்படுத்தக்கோரி, காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் - கரூா் மாவட்டம் நெரூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 700 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்படும் என முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் இத்திட்டம் பயனற்றது எனக் கூறி தமிழக அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.

நாமக்கல், கரூா், திருச்சி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் கதவணையுடன் கூடிய தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மோகனூா், ஈஸ்வரன் கோயில் அருகில் காவிரி ஆற்றில் இறங்கி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெயிலையும் பொருட்படுத்தாமல் அவா்கள் ஆற்றில் இறங்கி முழக்கங்களை எழுப்பினா். இந்தப் போராட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

Advertisement

இதனைத் தொடா்ந்து தமிழ்நாடு விவசாய முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவா் செல்ல.ராசாமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் மோகனூா் - நெரூா் இடையில் ரூ.136 கோடியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு ஆய்வுப் பணிக்கு மட்டும் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ரூ. 700 கோடி மதிப்பீட்டில் இந்த தடுப்பணைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் ஓரிரு மாதங்களுக்கு முன் மோகனூா் தடுப்பணைத் திட்டத்தால் எவ்விதப் பயனும் இல்லை என அந்தத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. சுமாா் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் பயன்பெறும் வகையிலான இத்திட்டத்தை மூன்று மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி அரசு கட்டாயம் செயல்படுத்த வேண்டும். அதனை வலியுறுத்தியே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது. தடுப்பணைத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடா்பாக முதல்வா் மீண்டும் அதிகாரிகளுடன் பரிசீலனை செய்ய வேண்டும். இத்திட்டம் செயல்படுத்தப்படாதபட்சத்தில் மேலும் பல்வேறு போராட்டங்களை விவசாய முன்னேற்ற கழகம் முன்னின்று நடத்தும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.