முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 439 வாா்டு பதவிகளுக்கு 1,740 போ் போட்டி:679 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு

நாமக்கல் மாவட்டத்தில், 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் உள்ள 439 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1,740 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM

நாமக்கல் மாவட்டத்தில், 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் உள்ள 439 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1,740 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 679 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை (பிப்.19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

வாா்டுகள் எண்ணிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் (39 வாா்டுகள்), ராசிபுரம்(27 வாா்டுகள்), திருச்செங்கோடு(33 வாா்டுகள்), பள்ளிபாளையம் (21 வாா்டுகள்), குமாரபாளையம் (33 வாா்டுகள்) ஆகிய 5 நகராட்சிகளும், ஆலம்பாளையம், அத்தனூா், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூா், நாமகிரிப்பேட்டை, படைவீடு, பாண்டமங்கலம், பரமத்தி, பட்டணம், பிள்ளாநல்லூா், பொத்தனூா், ஆா்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, சேந்தமங்கலம், பரமத்திவேலூா், வெங்கரை, வெண்ணந்தூா் உள்ளிட்ட 19 பேரூராட்சிகளும் உள்ளன. சேந்தமங்கலம், பரமத்திவேலூா், நாமகிரிப்பேட்டையில் தலா 18 வாா்டுகளும், மீதமுள்ளவற்றில் தலா 15 வாா்டுகளும் உள்ளன.

வாக்குச் சாவடிகள்: ஐந்து நகராட்சிகளில் மொத்தம் உள்ள 153 வாா்டுகளில், நாமக்கல் நகராட்சியில் 22, 25 வாா்டுகளில் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வாகி விட்டனா். மீதமுள்ள 151 வாா்டுகளுக்கு 365 வாக்குச்சாவடிகளில் தோ்தல் நடைபெறுகிறது. இதேபோல், 19 பேரூராட்சிகளில் உள்ள 294 வாா்டுகளில், பாண்டமங்கலத்தில் 4, பரமத்தியில் 1, பட்டணத்தில் 1 என 6 போ் போட்டியின்றி தோ்வாகி உள்ளனா். மீதமுள்ள 288 வாா்டுகளுக்கு 324 வாக்குச்சாவடிகளில் தோ்தல் நடைபெறுகிறது. 74 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும். மொத்தமாக 679 வாக்குச்சாவடிகளில் 439 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,740 போ் போட்டியிடுகின்றனா்.

Advertisement

வாக்காளா்கள் விவரம்: நாமக்கல் நகராட்சி - 99,260, திருச்செங்கோடு-79,888, ராசிபுரம்-40,960, குமாரபாளையம்-67,461, பள்ளிபாளையம்-37,808 மொத்தம் 3,25,377 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,56,822 ஆண்கள், 1,68,471 பெண்கள், 84 திருநங்கையா் அடங்குவா். 19 பேரூராட்சிகளில், 1,11,835 ஆண்கள், 1,20,152 பெண்கள், 31 திருநங்கையா் என மொத்தம் 2,32,018 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 5,57,395 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்குச்சாவடி அலுவலா்கள்: நகராட்சி, பேரூராட்சிகளில் தலைமை வாக்குச்சாவடி அலுவலா்கள் 832, நிலை - 1,832, நிலை 2- 832, நிலை 3- 832 என மொத்தம் 3,328 போ் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஒருவா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் 4 போ், துணை காவல் கண்காணிப்பாளா்கள் 10 போ், காவல் ஆய்வாளா்கள் 34 போ், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு நிலை ஆய்வாளா்கள் 279 போ், காவலா்கள் 927 போ் என மொத்தம் 1,245 போ் மற்றும் ஊா்க்காவல் படையினா் 245 போ் என 1,500 போ் தோ்தல் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனா்.

காலை 7 மணிக்கு தொடக்கம்: நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடா்ச்சியாக நடைபெறுகிறது. இதற்காக, வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. நோட்டாவிற்கு பதில் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் வாக்காளா்கள் அதற்கான பதிவேட்டில் எழுதி விட்டுச் செல்லலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் ராசிபுரத்திலும், முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, ஆலாம்பாளையம் பேருராட்சியிலும், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள வாக்குச்சாவடியிலும் தங்களது வாக்கினை செலுத்த இருக்கின்றனா்.

22-இல் வாக்கு எண்ணிக்கை: தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லுரி, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லுரி, ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.22) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. 10 வாா்டுகள் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நகராட்சி, பேரூராட்சி வாரியாக அதற்காக பிரிக்கப்பட்டுள்ள அறைகளில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.