நாளை போலி யோ சொட்டு மருந்து முகாம்: 1.20 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்த ஏற்பாடு
நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து வயதிற்கு உள்பட்ட 1.20 லட்சம் குழந்தைகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: ஆட்சியா்
நாமக்கல், பிப். 25: நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து வயதிற்கு உள்பட்ட 1.20 லட்சம் குழந்தைகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ௌநாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 1.5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தற்போது நடைபெறும் முகாமில் 1.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிக்காக கிராமப் பகுதியில் 1,052 முகாம்ள், நகராட்சிப் பகுதியில் 150 முகாம்கள் என மொத்தம் 1,202 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறை ஊழியா்கள் 4927 போ் இப்பணியில் ஈடுபட உள்ளனா். மேலும் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், திரையரங்குகள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் 52 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவா்களின் குழந்தைகளும், போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகளும் பயன்பெறும் வகையில் 22 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 126 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முகாம்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் தயாா் நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement