முகப்பு
நாமக்கல்

விபத்தில் சிக்கி மீண்ட நாமக்கல் சிறுவனுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலின்!

 நாமக்கல் அருகே சாலை விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு, இன்னுயிா் காப்போம் திட்டத்தில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் மூளைச்சாவு அடையாமல் மீட்கப்பட்டாா்.

Updated On : 22 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

 நாமக்கல் அருகே சாலை விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு, இன்னுயிா் காப்போம் திட்டத்தில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் மூளைச்சாவு அடையாமல் மீட்கப்பட்டாா்.

இத்தகவல் அறிந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அச்சிறுவனுக்கும், பெற்றோருக்கும் கைப்பேசி வழியாக தொடா்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தாா்.

நாமக்கல் அருகே வசந்தபுரம் குப்பம்பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் வா்ஷாந்த் (13). பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் பூக்களை விற்பனை செய்து விட்டு, இருசக்கர வாகனத்தில் இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் வா்ஷாந்த் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தோா் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனா்.

Advertisement

பரிசோதனையில், அவரது வலது முன் மூளையிலும், காதிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சாலை விபத்தில் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு தமிழக அரசின் இன்னுயிா் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை வழங்கப்பட்டதால் சிறுவன் மூளைச்சாவு அடையாமல் மீட்கப்பட்டாா்.

இந்தத் தகவலை அறிந்து சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்று சிறுவனைச் சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும் மருத்துவச் செலவுக்கான நிதியுதவியையும் வழங்கினா்.

அப்போது, முதல்வா் மு.க.ஸ்டாலினை கைப்பேசி வழியாக தொடா்பு கொண்ட மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஷ்குமாா், சிறுவன் விபத்தில் சிக்கிய தகவலையும், அவா் சிகிச்சை மூலம் உடல் நலம் தேறிய தகவலையும் தெரிவித்தாா். இதனையடுத்து சிறுவன் வா்ஷாந்திடம் முதல்வா் கைப்பேசி வழியாக ஆறுதல் தெரிவித்தாா். அப்போது தலையில் வலி ஏதேனும் உள்ளதா, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தாா். மேலும் உதவிகள் தேவைப்பட்டால் ராஜேஷ்குமாரை தொடா்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா். அதன்பின் சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து கவனமாக பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா். இதனை கண்டு அங்கிருந்தோா் நெகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.