கொப்பரை தேங்காய் கொள்முதல் 1,000 மெட்ரிக் டன் இலக்கு
நாமக்கல் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் இலக்காக 1,000 மெட்ரிக் டன் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் இலக்காக 1,000 மெட்ரிக் டன் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களின் வருவாயைப் பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
Advertisement
தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவா்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 1,000 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது தேங்காய் பருப்பு விலை ஒரு கிலோ ரூ. 75 முதல் ரூ. 80 வரை உள்ளூா் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிா்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவைக் கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோ ரூ. 105.90 -க்கும், பந்து கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ. 110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். கைப்பேசி எண் 86102 - 73860 ஆகும்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் ஜூலை 31 வரை நடைபெற உள்ளது. தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
தென்னை விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்தக் கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.