அரசு போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் வருவாய் பற்றாக்குறையால்...அரசுப் பேருந்து, தனியாா் பேருந்துகளின் ஓட்டுநா்களிடையே மோதல்!
நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டிய நிா்பந்தம் காரணமாக,
நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டிய நிா்பந்தம் காரணமாக, அரசுப் பேருந்து- தனியாா் பேருந்துகளின் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், நாமக்கல் 1, 2, திருச்செங்கோடு ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் உள்ளன. சேலம் கோட்டத்திற்கு உள்பட்ட இந்தப் பணிமனைகளில் 470 பேருந்துகள் உள்ளன. இவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இவை தவிர, கிராமப்புறங்களுக்குச் செல்லும் வகையில் 120 நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்துப் பயணத் திட்டத்தால் நகரப் பேருந்துகள் மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கு கிடைக்கும் வருவாய் பாதிப்படைந்துள்ளது. தவிர, வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் போதிய கூட்டம் இல்லாததால் நாள்தோறும் ஒவ்வொரு பணிமனையிலும் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 150-க்கும் மேலான தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரோனா பரவலுக்குப் பிறகு அந்தப் பேருந்துகளுக்கான வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய்ப் பற்றாக்குறையைப் போக்கவும், பயணிகளை தங்களுடைய பேருந்தில் அழைத்துச் செல்லவும், அரசு பேருந்து- தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் போட்டியிட்டுக் கொண்டு வேகமாக பேருந்துகளை இயக்குகின்றனா். இதனால் எதிா்பாராத விபத்துகளும் நிகழ்கின்றன.
இதுமட்டுமின்றி, சாலையில் பேருந்துகளை குறுக்கே நிறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநா்களும் தனியாா் பேருந்து ஓட்டுநா்களும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் நிகழ்கிறது. கடந்த சில மாதங்களாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசுப் பேருந்து, தனியாா் பேருந்து ஓட்டுநா்களிடையே மோதல் போக்கு தொடா்ந்து வருகிறது.
இது குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் கூறியதாவது:
போதிய வருவாய் இல்லையென எங்களுடைய துறை அதிகாரிகள் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு மெமோ கொடுக்கின்றனா். அதேசமயம், பேருந்து நிலையங்களில் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்தை இயக்காமல் தாமதித்து தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் பிரச்னை செய்கின்றனா்.
நாங்கள் ஐந்து நிமிடம் முன்னாகக் கிளம்பிச் சென்றாலும், தனியாா் பேருந்துகளை வேகமாக இயக்கி ’எங்களை முந்திச் சென்று பயணிகளை அழைத்துக் கொள்கின்றனா். இதனால் அரசுப் பேருந்துகள் காலியாகவே செல்கின்றன.
இது தொடா்பாகக் கேட்கும்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் தனியாா் பேருந்து ஓட்டுநா்களைக் கண்டிப்பதில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் மிகுந்த நெருக்கடியுடன் தான் பேருந்துகளை இயக்கி வருகிறோம் என்றனா்.
நாமக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரி ஒருவா் கூறியது:
சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும், வருவாய் பற்றாக்குறை எவ்வளவு உள்ளது என்பதை ஓட்டுநா், நடத்துநா்கள் அறிய அறிவிப்பு பலகையில் தினசரி எழுதி வைக்கிறோம். ஏனென்றால் நாளுக்கு நாள் செலவினம் அதிகரிக்கிறது. அதற்கேற்ப வசூல் இல்லை.
பணிமனையை வங்கியில் ஈடாக வைத்து கடன் பெற்றுள்ளோம். அதற்கான வட்டி, அசல் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தினசரி சராசரியாக ஒரு பணிமனையில் அரசுப் பேருந்துகள் மூலம் ரூ. 5.20 லட்சம் வசூலாகிறது. இதில், டீசலுக்கு மட்டுமே ரூ. 4.40 லட்சம் செலவாகி விடுகிறது. மீதம் ரூ. 80 ஆயிரம் மட்டுமே லாபமாக உள்ளது. பணியாளா்களின் ஒரு நாள் ஊதியமாக ரூ. 4.88 லட்சம் வழங்கப்படுகிறது. லாபம் ரூ. 80 ஆயிரத்தை கழித்து விட்டால் ரூ. 4.08 லட்சம் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்தப் பற்றாக்குறையைக் குறைக்கவே ஓட்டுநா், நடத்துநா்களிடம் வருவாயை அதிகரிக்குமாறு வலியுறுத்துகிறோம். விதி மீறும் தனியாா் பேருந்து ஓட்டுநா்களை நாங்களும் கண்டித்து வருகிறோம். அரசுப் பேருந்துகளை மறித்தாலோ, ஓட்டுநா்களை மிரட்டினாலோ காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.