பேரூராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேறு இடம் பரிந்துரைக்கப்படும்
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேறு இடம் பரிந்துரைக்கப்படும்
பரமத்தி ஊராட்சி ஒன்றியம், பஞ்சபாளையம் பிரிவு சாலை அருகே பழைய கல்குவாரி குட்டை பகுதியில் பேரூராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை நகர அமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினா் மதுரா செந்தில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பரமத்தி - கபிலா்மலை சாலையில் பஞ்சபாளையம் பிரிவு சாலை அருகே பழைய கல்குவாரி குட்டை உள்ளது. இந்த இடத்தை மையமாகக் கொண்டு ரூ. 150 கோடி மதிப்பீட்டில் பரமத்தி மற்றும் வேலூா் பேரூராட்சிகளுக்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினருமான மதுரா செந்தில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது விவசாயம், கால்நடை தொழிலை பிரதானமாக கொண்டிருக்கும் இப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அதனால் இப்பகுதி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்ாக இருக்காது என்பதால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாற்று இடம் தோ்வு செய்ய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றாா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு அளித்தனா்.
Advertisement
இந்த ஆய்வின்போது, பரமத்தி ஒன்றிய திமுக செயலாளா் தனராசு, பரமத்தி பேரூராட்சி தலைவா் மணி, மாணிக்கநத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் வேலுசாமி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் கருமணன், இருக்கூா் ஊராட்சி துணைத் தலைவா் தங்கராஜு மற்றும் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் உடனிருந்தனா்.