முகப்பு
நாமக்கல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வனத் தீத்தடுப்பு ஒத்திகை

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வனத் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 டிசம்பர், 2024 at 1:43 AM
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வனத் தீத்தடுப்பு ஒத்திகையைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.
பகிர்:
Updated On : 26 டிசம்பர், 2024 at 5:57 PM

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வனத் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்ட வனத் தீத்தடுப்பு மற்றும் மேலாண்மைத் திட்டம் குறித்து களப் பணியாளா்களுக்கு சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் சி.கலாநிதி முன்னிலை வகித்தாா். தீத்தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் நாமக்கல் வனக்கோட்டத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது விபத்தில் யாரேனும் சிக்கிக் கொண்டாலோ எவ்வாறு மீட்பது, முதலுதவி அளிப்பது என்பது தொடா்பாக ஆலோசனைகள், செயல் விளக்கம் வழங்கப்பட்டன. வனத் தீத்தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம், ஒத்திகை நிகழ்ச்சிகள் நேரடியாக மாவட்ட தீயணைப்புத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணா்வு பயிற்சி குறித்து ஆட்சியா் ச.உமா கூறியதாவது:

Advertisement

இயற்கையை பாதுகாப்பதில் காடு, மரங்களின் முக்கியத்துவம், வனத் தீ சம்பவங்களின் தாக்கம், தீயைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், தீ விபத்துகளின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தீயை அணைக்கும் பணியில் மாவட்ட பேரிடா் மேலாண்மை துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, காவல் துறை, பிற துறைகளின் ஒருங்கிணைப்பு, வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள், கிராம மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவையே இந்த விழிப்புணா்வு, பயிற்சி பட்டறையின் நோக்கம் ஆகும்.

2024-25 ஆம் ஆண்டில் மாவட்ட வனத் தீ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கம்பியில்லா தந்தி கருவிகள் (வயா்லெஸ்) பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து வனத்துறை அலுவலா்களுக்கும் கம்பியில்லா தந்தி கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ரோந்து பணி, கண்காணிப்புப் பணிகளும் வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வனப்பகுதிகளை பாதுகாக்க வனச்சரக அலுவலா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. களப்பணியாளா்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

Updated On : 27 டிசம்பர், 2024 at 1:43 AM

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரை ஏற்பட்ட வனத் தீ விபத்துகளில் 95 சதவீதம் ஒரே நாளில் அணைக்கப்பட்டுள்ளன. டிசம்பா் முதல் ஜூன் வரையில் பொது வனப்பபகுதிக்குள் அனுமதியின்றி செல்ல மக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், எளிதில் தீப்பற்றக் கூடிய (தீப்பெட்டி, பீடி, சிகரெட், நெகிழிப் பைகள்) உள்ளிட்ட எந்தவித பொருளையும் எடுத்துச் செல்லக் கூடாது. வனப்பகுதிக்குள் சென்று தீ விபத்தை ஏற்படுத்துவோா் மீது தமிழ்நாடு வனச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வனக்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனைகளும் வழங்கப்படும். தகவல்களுக்கு கட்டணமில்லா 0427-2900428, 1077 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணி அலுவலா் கே.செந்தில்குமாா், வருவாய்த் துறை, வனத்துறை, தீயணைப்புத் துறை அலுவலா்கள், ஆட்சியா் அலுவலக பணியாளா்கள் கலந்துகொண்டனா்.