‘காற்றின் வேகத்தால் கோழித் தீவனங்கள் விரயமாக வாய்ப்பு’
நாமக்கல்லில் அதிக காற்றின் வேகம்; தீவன விரயத்தை தடுக்க ஆலோசனை
காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் தீவன விரயத்தை தடுக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 75.2 டிகிரி பாரன்ஹீட்டாக காணப்பட்டது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். மேற்கிலிருந்து மணிக்கு 19 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
சிறப்பு ஆலோசனை: காற்றின் வேகம் தொடா்ந்து அதிகப்படியாக காணப்படுவதால், தீவனம் வீணடிக்கப்டாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கோழிப் பண்ணையாளா்கள் ஈடுபட வேண்டும். இன்னும் இரு மாதங்களுக்கு அதிக காற்றின் வேகம் கொண்ட வானிலையே நிலவும். தீவன விரயத்தை தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணெய் சோ்க்கலாம். இதனால் மதிப்புள்ள வைட்டமின் காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும்.
மேலும், உயா்மனைகளில் பக்கவாட்டில் படுதாக்களைக் கட்டி தொங்கவிட வேண்டும். கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளைப் பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் மேல்மூச்சுக் குழல் அயற்சி பாதிப்பால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் உயிா் பாதுகாப்பு முறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். வெயில் காலத்தில் தெளிப்பான்களைப் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.