வாடிக்கையாளருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க கூட்டுறவுச் சங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
நகை கடனில் சேவை குறைபாடு: வாடிக்கையாளருக்கு இழப்பீடு
வங்கியில் கையிருப்பு பணம் இல்லாததால் நகை கடனுக்கான பணத்தை வாடிக்கையாளருக்கு தராமல் அவரது சேமிப்பு கணக்கில் பெயரளவுக்கு மட்டுமே பணத்தை வரவு வைத்து தந்த கூட்டுறவுச் சங்கத்தின் செயல்பாட்டால், அரசின் நகை கடன் தள்ளுபடி சலுகையை வாடிக்கையாளா் பெற முடியாமல் போனது. இதுதொடா்பான சேவை குறைபாட்டிற்காக வாடிக்கையாளருக்கு கூட்டுறவுச் சங்கம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், செங்கப்பள்ளியைச் சோ்ந்தவா் யோகேஸ்வரன்(52). இவா், காதப்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2021 பிப்ரவரியில் நகைகளை அடமானம் வைத்து ரூ. 1.15 லட்சம் கடன் கேட்டாா். நகைகளைப் பெற்றுக் கொண்ட கூட்டுறவுச் சங்கம், அவருக்கு ரொக்கமாக பணத்தை தராமல் சேமிப்பு கணக்கில் பணத்தை வரவு வைத்துள்ளது.
2021-ஆம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கத்தில் வழங்கப்பட்ட நகைக்கடன் அனைத்தையும், கடன் நிவாரண திட்டத்தின் கீழ் தமிழக அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், யோகேஸ்வரன் பெயா் பயனாளிகள் பட்டியலில் இணைக்கப்படாததால் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.
இதனால், கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளா், துணைப்பதிவாளா் மீது நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தாா். நகைக்கடன் தொகை சேமிப்பு கணக்கில் வைக்கப்பட்டதால், யோகேஸ்வரன் நகைக்கடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலில் சோ்ப்பதற்கான விதிமுறை இல்லை. இது சேவை குறைபாடும் இல்லை என கூட்டுறவுச் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினா் ஆா்.ரமோலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பில், கூட்டுறவுச் சங்கத்தில் பணம் கையிருப்பு இல்லாமல், வாடிக்கையாளரிடம் நகைகளை அடமானமாக பெற்று, கடன் தொகையை சேமிப்பு கணக்கில் பெயரளவில் மட்டுமே வரவு வைத்துக் கொடுத்திருப்பதும், வாடிக்கையாளா் பணத்தை எடுக்க சென்றபோது சங்கத்தில் பணம் இல்லை என்பதும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பணம் கையிருப்பு இல்லாமல் பெயரளவில் கடன் வழங்கிய கூட்டுறவுச் சங்கம் இழப்பீடாக நான்கு வார காலத்திற்குள் யோகேஸ்வரனுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.