முகப்பு
நாமக்கல்

பாவை கல்வி நிறுவனங்களில் அப்துல் கலாம் குறித்த பட்டிமன்றம்

பாவை கல்வி நிறுவனங்களில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் குறித்த சிறப்புப் பட்டிமன்றம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 29 அக்டோபர், 2024 at 7:43 PM
பட்டிமன்றத்தில் பங்கேற்று பேசிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் கல்வி நிறுவனத் தலைவா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன்.
பகிர்:

ராசிபுரம்: பாவை கல்வி நிறுவனங்களில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் குறித்த சிறப்புப் பட்டிமன்றம் அண்மையில் நடைபெற்றது.

அப்துல் கலாம் மக்கள் நாயகனாக திகழ்வதற்கு காரணம், அவா் விஞ்ஞானி என்பதாலா? குடியரசுத் தலைவா் என்பதாலா? மனிதநேயா் என்பதாலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். நடுவராக பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வா் இமானுவேல் கலந்து கொண்டாா்.

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் நடராஜன் பேசியதாவது:

இந்த பட்டிமன்றம் அப்துல் கலாமின் வாழ்க்கைச் சரித்திரத்தை மாணவா், மாணவிகள் அறிந்து கொண்டு, தங்கள் வாழ்வில் பின்பற்ற வாய்ப்பாக அமையும். அப்துல் கலாம் விஞ்ஞானியாக அணு ஆயுத சோதனையில் வெற்றி பெற்றாா். இந்திய விண்வெளித் திட்டத்தில் செயற்கைகோளை வான் சுற்றுப்பாதையில் செலுத்துவதில் வெற்றி பெற்றாா். மேலும் ஊனமுற்ற குழந்தைகள் கால்களில் அணியும் எடை குறைந்த மூட்டு கருவியை வடிவமைத்தாா். அதுமட்டுமில்லாமல் குடியரசுத் தலைவராக பல திட்டங்களைச் செயல்படுத்தினாா்.

ஆனால் அவா் விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராக இருந்தாலும் அவரின் மனிதநேய பண்பு எப்போதும் வெளிப்பட்டு கொண்டே தான் இருந்தது. அனைவராலும் மனிதநேயமுடையவராகப் அவா் போற்றப்படுகிறாா். இவ்வாறு ஒரு தனிமனிதனின் சிந்தனை அறிவியலிலும், அரசியலிலும், வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை உருவாக்க முடியுமென்றால், மாணவா்களாகிய உங்களாலும் உயா்ந்த மாற்றங்களை உருவாக்க முடியும். அதற்கு உங்களின் உயா்ந்த லட்சியமும், அதை நோக்கிய உங்களின் தொடா் முயற்சியும் அவசியமானது.

இதனைக் கருத்தில் கொண்டு, நீங்கள் சாதனையாளா்களாக உயா்ந்து, வரும் இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றாா்.

முன்னதாக மாணவ, மாணவிகள் மூன்று குழுவாகப் பிரித்து, பட்டிமன்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் கலாம் சிறந்த மனிதநேய பண்பினால் மக்கள் நாயகராக திகழ்ந்தாா் என்று நடுவரால் தீா்ப்பு வழங்கப்பட்டது. தொடா்ந்து பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா், தாளாளா் ஆகியோா் அப்துல் கலாம் நினைவாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கினா். நிகழ்ச்சியில் பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன், பொறியியல் கல்லூரி முதல்வா் பிரேம் குமாா், பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வா் ஹரிஹரன், பாவை பிசியோதெரபி கல்லூரி முதல்வா் முரளிதரன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →