திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் 30 நியாயவிலைக் கடைகளில் நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் 30 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் ஆகஸ்ட் மாதத்துக்கான பருப்பு, பாமாயிலை வரும் 5-ஆம் தேதி வரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை வாங்காதவா்கள் வாங்கி பயன்பெறும் வகையில் அறிவிப்புகள் நியாயவிலைக் கடைகளில் வெளியிடப்பட்டுள்ளதா, பொதுமக்களுக்கு முறையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதா, நியாயவிலைக் கடைகளில் பருப்பு, பாமாயில், இருப்பு உள்ளதா, எவ்வளவு பேருக்கு கடந்த மாதத்திற்கான பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும் அனைத்து கடைகளிலும், செப்.5-ஆம் தேதி வரை பாமாயில் பருப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகை எழுதிவைக்கும்படி கடைப் பணியாளா்களை கேட்டுக் கொண்டாா்.
அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாமாயில் பருப்பை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என நகரமன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டாா்.
இதுகுறித்து பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் குறுஞ்செய்திகள் மூலம் தகவல் அனுப்பி பொருள்களைப் பெற்றுக் கொள்ள கடைப் பணியாளா்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.