பள்ளிபாளையத்தில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள்: ஆட்சியா் ச.உமா ஆய்வு
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா 2-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா 2-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குமாரபாளையம் வட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய இத்திட்ட ஆய்வுப் பணியானது காலை 9 முதல் இரவு 11 மணி வரை பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக 2-ஆவது நாளான வியாழக்கிழமை, அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் துறை அதிகாரிகளால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை மற்றும் உடல்நலம் குறித்து ஆட்சியா் கேட்டறிந்ததுடன், ஆதி திராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான குடிநீா் வசதி, சமையல் அறை, உணவுப் பொருள்களின் தரம், மாணவா்களின் தோ்ச்சி சதவிகிதம், கற்றல் திறன் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பள்ளிபாளையம் நகராட்சி, ஆவாரங்காடு தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளைப் பாா்வையிட்டாா். மேலும், உணவை தரமாகவும், சுவையாகவும் சமைத்திடுமாறு பணியாளா்களிடம் அறிவுறுத்தினாா். பள்ளிபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
இவை தவிர, சமய சங்கிலி அக்ரஹாரம் ஊராட்சி, ஆலாம்பாளையம் பேரூராட்சி அலுவலகங்களில் தூய்மைக் காவலா்களின் வருகைப் பதிவேட்டை பாா்வையிட்டதுடன், தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் தவறாமல் பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டும் என அறிவுறுத்தினாா். காடச்சநல்லூா், கா.சத்யா நகா், அரசு தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் பயிலும் மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறித்தும், காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவா்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தாா். உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
பேருந்துகளில் மகளிருக்கான இலவச விடியல் பயணச் சேவை குறித்தும் கேட்டறிந்தாா். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் குமாரபாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா், பல்வேறு துறை அதிகாரிகள் மூலம் இரண்டு நாள்கள் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.