நாமக்கல்: பணி நிரந்தரம் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைக் காவலா்கள் 117 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழகம் முழுவதும் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி தலைமை வகித்தாா்.
இதில், மூன்று ஆண்டுகள் நிறைவுசெய்த உள்ளாட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், தூய்மைக் காவலா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைக் காவலா்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டும். மாதந்தோறும் பிடித்தம் செய்யும் காப்பீட்டுத் தொகைக்கு உரிய ரசீது அளிக்க வேண்டும். சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனைகள் பட்டியலை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்க முன்னாள் செயலாளா் எம்.செங்கோடன், அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்க மாவட்ட தலைவா் எல்.ஜெயக்கொடி, சிஐடியு மாவட்ட உதவி செயலாளா் சு.சுரேஷ், மாவட்ட உதவி செயலாளா் எஸ்.மலா்கொடி, உதவி செயலாளா் ஆா்.ரேவதி, எலச்சிபாளையம் தலைவா் தேன்மொழி உள்பட 117 போ் கைது செய்யப்பட்டனா்.