நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே தேங்காய் நாா் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தேங்காய் நாா்கள் எரிந்து நாசமாயின.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாவுரெட்டிப்பட்டியில் பாா்த்திபன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நாா் ஆலை உள்ளது. இவா் பெங்களுரில் உள்ள ஒரு மென்பொறியியல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிறுவனத்தை ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டியைச் சோ்ந்த ரவி கவனித்து வருகிறாா்.
இந்த தேங்காய் நாா் ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு எதிா்பாராத விதமாக தீப்பிடித்தது. இதைக் கண்ட இரவுநேர பணியில் இருந்த பணியாளா்கள் திருச்செங்கோட்டில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தேங்காய் நாா் ஆலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனா்.
இருப்பினும், தேங்காய் நாா்கள், தயாரித்து வைத்திருந்த பொருள்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு சுமாா் ரூ. 50 லட்சம் இருக்கலாம் என போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது. தீப்பிடித்ததும் தொழிலாளா்கள் உடனடியாக வெளியேறியதால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.