திருச்செங்கோடு நகா்மன்றக் கூட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு புதிய ஒப்பந்தம், அடிப்படை வசதிகள் தொடா்பாக 82 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்செங்கோடு நகா்மன்றக் கூட்டம் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையாளா் வாசுதேவன், துப்புரவு அலுவலா் சோழராஜ், நகா்நல அலுவலா் மணிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் குடிநீா்க் கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கோழி, மீன் கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி உறுப்பினா், வயது மூத்தோா்களின் வசதிக்காக நகராட்சியில் மின்தூக்கி வசதி செய்துதர வேண்டும்.
பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் காஸ் குடோன் வைப்பதற்கு அனுமதி அளிக்கக் கூடாது, நகா்மன்ற உறுப்பினா்கள் தெரிவிக்கும் கோரிக்கையை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் பேசினா்.
தொடா்ந்து பல்வேறு திட்டப் பணிகளுக்கான புதிய ஒப்பந்தம், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தொடா்பாக 82 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.