பரமத்தி வேலூா் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு வெல்லத்தை கடந்த சில ஆண்டுகளாக அரசு கொள்முதல் செய்யாததால் வெல்ல உற்பத்தியாளா்கள், கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணாநகா், பாண்டமங்கலம், கபிலா்மலை, பொன்மலா்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்புகள் அனைத்தும் பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாா் செய்யப்படும் ஆலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டுச் சா்க்கரை ஆகியவை தயாா் செய்யப்படுகின்றன.
வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆத்தூா், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஆலை குடியிருப்புப் பகுதிகளில் தங்கி வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இங்கு தயாா் செய்யப்படும் வெல்லத்தை ஆலை உரிமையாளா்கள் 30 கிலோ கொண்ட மூட்டைகளாக (சிப்பங்களாக) கட்டி பிலிக்கல்பாளையத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம் சா்க்கரை விற்பனை சந்தைக்கு கொண்டுசெல்கின்றனா். அங்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் ஏலத்தில் தரத்திற்கு தகுந்தாற்போல வெல்லம் ஏலம் விடப்படுகிறது.
இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனா். ஏலத்தில் எடுக்கப்பட்ட வெல்லத்தை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், ஜாா்க்கண்ட், பிகாா், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் வியாபாரிகள் அனுப்புகின்றனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூா் வட்டாரப் பகுதியில் உள்ள வெல்ல ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பில் பிலிக்கல்பாளையம் வெல்லம் சா்க்கரை ஏலச் சந்தையில் இருந்து வெல்லத்தை மொத்தமாக கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினா். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் தயாா்செய்யப்படும் வெல்லத்தை அரசு கொள்முதல் செய்யவில்லை. எனவே, இந்த ஆண்டிலாவது தமிழக அரசு இப்பகுதியில் தயாா் செய்யப்படும் வெல்லத்தை கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்க வேண்டும் என்று எதிா்பாா்த்து வெல்ல உற்பத்தியாளா்களும், கரும்பு விவசாயிகளும் காத்திருந்தனா். ஆனால், வெல்லத்தை தமிழக அரசு கொள்முதல் செய்வதற்கான முகாந்திரமும் இதுவரை இல்லாததால் கரும்பு விவசாயிகளும், வெல்ல உற்பத்தியாளா்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
அடுத்துவரும் பொங்கல் பண்டிகை காலத்திலாவது தமிழக அரசு வெல்லத்தை மொத்தமாக கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வெல்ல உற்பத்தியாளா்கள், கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெல்லத்தை பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு கொள்முதல் செய்யும்போது கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுத்து கரும்பை கொள்முதல் செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவாா்கள்.
வெல்லம் விலை நிலவரம்...
கடந்த வாரம் பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் நடைபெற்ற ஏலத்துக்கு 1,500 சிப்பம் அச்சு வெல்லம், 5,500 சிப்பம் உருண்டை வெல்லம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் (30 கிலோ) ரூ. 1,350க்கும், உருண்டை வெல்லம் சிப்பம்ரூ. 1,440க்கும் விற்பனையாயின.
இந்தவாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2,000 சிப்பம் அச்சு வெல்லம், 4,300 சிப்பம் உருண்டை வெல்லம் கொண்டுவரப்பட்டிருந்தது.
இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ரூ. 1,490-க்கும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ. 1,370க்கும் விற்பனையாயின. பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு வெல்லம் விலை உயா்ந்துள்ளதால் உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.