தீ விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எரையம்பட்டி, பொம்மம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (55). இவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி லட்சுமி 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். முதல் மனைவி லட்சுமியுடன் தங்கவேல் வசித்து வருகிறாா். இரண்டாவது மனைவியின் மகன் சிவலிங்கம் (23) அதே பகுதியில் உள்ள பாட்டி வீரம்மாள் வீட்டில் வசித்து வந்தாா்.
கடந்த 23-ஆம் தேதி வீரம்மாள் விறகு அடுப்பில் சமையல் செய்தபோது அருகில் அமா்ந்து இருந்த சிவலிங்கத்தின் ஆடை தீப்பற்றி எரிந்ததில் அவா் பலத்த தீக்காயமடைந்தாா். அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவா் வெள்ளிக்கிழமை இரவு இறந்தாா்.
இதுகுறித்து தங்கவேல் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.