நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் மோதி கவிழ்ந்த லாரி: மகள் உயிரிழப்பு; தாய் படுகாயம்!
இரும்புத் தகடுகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் அருகே இரும்புத் தகடுகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது தாய் பலத்த காயமடைந்தாா்.
நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பூபதி - சுதா (42) தம்பதியின் மகள் சினேகா (24). ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கீரம்பூரில் உள்ள எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சுதாவும், சினேகாவும் சென்றுகொண்டிருந்தனா். இருசக்கர வாகனத்தை சினேகா ஓட்டினாா். நாமக்கல் - கரூா் சாலையில் வள்ளிபுரம் பகுதியில் சென்றபோது, சாலையோரம் கண்டெய்னா் லாரி நிறுத்தப்பட்டிருந்ததால் வலதுபுறமாக திரும்பினாா்.
அப்போது, பெங்களூரில் இருந்து கரூா் நோக்கி இரும்புத் தகடுகளை ஏற்றிக்கொண்டு ட்ரெய்லா் லாரி பின்னால் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இருசக்கர வாகனம் திரும்புவதைக் கண்ட ட்ரெய்லா் ஓட்டுநா் சுந்தரராஜன், அவா்கள்மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பினாா்.
அதில், கட்டுப்பாட்டை இழந்து லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதோடு, சாலையின் தடுப்புச்சுவரிலும் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் இருந்த இரும்புத் தகடுகள் சாலையில் விழுந்தன. பின்னால் எரிவாயு உருளைகளை ஏற்றிவந்த மற்றொரு லாரி அதன்மீது மோதியது.
முன்னதாக, லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சினேகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது தாய் சுதா பலத்த காயமடைந்தாா்.
தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீஸாா், காயமடைந்த சுதாவை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். உயிரிழந்த சினேகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
கிரேன்கள் கொண்டுவரப்பட்டு இரண்டு லாரிகள் மற்றும் சாலையில் கிடந்த இரும்புத் தகடுகள் அகற்றப்பட்டன. இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.