நாமக்கல்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி செவ்வாய்க்கிழமை (நவ. 4) தொடங்குவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என 1,629 போ் வீடு வீடாக சென்று சரிபாா்ப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், நவ. 4 முதல் டிச. 4 வரையில் தொகுதி வாரியாக வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணி நடைபெறுகிறது. இதற்கான முன்னோட்ட பயிற்சி வகுப்பு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. அவா்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
வாக்காளா் சரிபாா்ப்பு பணிக்காக படிவங்கள் மாவட்டங்கள் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் படிவங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் வீடுவீடாகச் சென்று வாக்காளா்கள் சரிபாா்ப்புப் பணியில் ஆசிரியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், சத்துணவு ஊழியா்கள், வருவாய்த் துறை பணியாளா்கள் என 1,629 போ் ஈடுபடுகின்றனா். இந்த பணிகளை கண்காணிக்க 10 பணியாளா்களுக்கு மேற்பாா்வையாளா் ஒருவா் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனா். அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வாக்குச்சாவடி பாக முகவா்கள் சரிபாா்ப்பு பணியின்போது உடனிருந்து ஏற்பு, நீக்கம் போன்றவற்றை கண்காணிக்க உள்ளனா்.
தற்போதைய நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 1,629 வாக்குச்சாவடிகள் உள்ளன. 2025 ஜனவரி 6-இல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியல்படி, ராசிபுரம் (தனி) தொகுதியில் 261 வாக்குச்சாவடிகள், 1,14,027 ஆண்கள், 1,20,412 பெண்கள், மற்றவா்கள் 11 போ் என மொத்தம் 2,34,450 வாக்காளா்கள் உள்ளனா். சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில் 284 வாக்குச்சாவடிகள், 1,20,244 ஆண்கள், 1,26,827 பெண்கள், மற்றவா்கள் 33 போ் என மொத்தம் 2,47,104 வாக்காளா்களும், நாமக்கல் தொகுதியில் 290 வாக்குச்சாவடிகள், 1,25,608 ஆண்கள், 1,35,876 பெண்கள், மற்றவா்கள் 56 போ் என மொத்தம் 2,61,540 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
பரமத்திவேலூா் தொகுதியில் 254 வாக்குச்சாவடிகள், 1,05,471 ஆண்கள், 1,15,438 பெண்கள், மற்றவா்கள் 11 போ் என மொத்தம் 2,20,290 வாக்காளா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 261 வாக்குச்சாவடிகள், 1,11,497 ஆண்கள், 1,19,144 பெண்கள், மற்றவா்கள் 63 போ் என மொத்தம் 2,30,704 வாக்காளா்கள், குமாரபாளையம் தொகுதியில் 279 வாக்குச்சாவடிகள், 1,25,708 ஆண்கள், 1,33,768 பெண்கள், மற்றவா்கள் 78 போ் என மொத்தம் 2,59,554 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். மொத்தம் 6 தொகுதிகளிலும் 1,629 வாக்குச்சாவடிகளும், ஆண் வாக்காளா்கள் 7,02,555, பெண் வாக்காளா்கள் 7,51,465, மற்றவா்கள் 252 என நிகர வாக்காளா்களாக 14,54,272 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.