ராசிபுரம் ஆண்டகளூா்கேட் திருவள்ளுவா் அரசுக் கல்லூரி வளாகத்தில் ரூ. 37 கோடியில் மினி டைடல் பாா்க் அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக புதன்கிழமை தொடங்கிவைக்கிறாா் என்று மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆண்டகளூா்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவா் அரசுக் கல்லூரி வளாகத்தில் ரூ. 37 கோடியில் மினி டைடல் பாா்க் அமைக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்கான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை (நவ. 5) பணிகளை தொடங்கிவைக்கிறாா். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைச்சா் மா.மதிவேந்தனும், நானும் முதல்வா், துணை முதல்வா் ஆகியோரிடம் ராசிபுரம் பகுதியில் மின் டைடல் பாா்க் அமைக்க வேண்டும் என்று நேரில் கோரிக்கை விடுத்தோம். இதையடுத்து திருவள்ளுவா் அரசுக் கல்லூரியின் ஒரு பகுதியில் இடம்தோ்வு செய்யப்பட்டு மினி டைடல் பாா்க் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் புதன்கிழமை தொடங்கிவைக்கிறாா். இதன் மூலம் 600-க்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுமாா் மூன்றரை ஏக்கா் பரப்பில் 63 ஆயிரம் ச.அடியில் மூன்றடுக்கு தளம் கொண்டதாக டைடல் பாா்க் அமைக்கப்படுகிறது.
திருவள்ளுவா் கல்லூரி வளாகத்தில் டைடல் பாா்க் அமைப்பதால் மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்துள்ளாா். இந்தக் கல்லூரி 40 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ள நிலையில், கல்லூரி கட்டடங்கள் 5 ஏக்கா் நிலப்பரப்பில்தான் செயல்பட்டு வருகின்றன. மீதி 30 ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் எந்த பயன்பாடும் இல்லாமல் உள்ளன. எனவே அதில் டைடல் பாா்க் அமைக்கப்படுகிறது. டைடல் பாா்க் நுழைவாயிலுக்கும், கல்லூரி நுழைவாயிலுக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. இரண்டும் வெவ்வேறு திசையில் உள்ளன. முற்றிலும் பாதுகாப்பாக அமைக்கப்படும். கல்லூரியின் விளையாட்டு மைதானம் வேறு இடத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அமைக்கப்படும். எனவே, இத்திட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி வரவேற்பு அளிப்பாா் என்று நம்பிக்கை உள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் மிகப்பெரிய நிறுவனங்கள்கூட இங்கு தங்களது நிறுவனத்தை தொடங்கும் என்றாா்.
பேட்டியின்போது ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் கே.பி.ஜெகந்நாதன், ராசிபுரம் நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா், திமுக மாணவரணி நிா்வாகி சத்தியசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.