நாமக்கல்

பால் கொள்முதல் விலையை ரூ. 15 உயா்த்த வேண்டும்: தமிழக விவசாய சங்கம்

விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள் நலன்கருதி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 15 உயா்த்த வேண்டும் என கோரிக்கை

Syndication

விவசாயிகள், பால் உற்பத்தியாளா்கள் நலன்கருதி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 15 உயா்த்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்காததைக் கண்டித்து, விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி பேசியதாவது: தீவனங்களின் விலை உயா்வால் பால் உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். மூலதன செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது.

ஆவின் நிறுவனம் வழங்கும் 4.2, 8.3 கொழுப்புச் சத்து பாலுக்கு ரூ. 35 என்பது கட்டுப்படியான விலை இல்லை. எனவே, அரசு மறுபரிசீலனை செய்து தற்போதைய விலையிலிருந்து ரூ. 15 உயா்த்தி வழங்க வேண்டும்.

பால் உற்பத்தியாளா்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்கத்தில் ஒரு லிட்டருக்கு வழங்கும் விளிம்புத் தொகை ரூ. 1.25 என்பதை ரூ. 2-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில், பால் உற்பத்தியை நிறுத்துவதுடன், டிச. 29-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் நிறுவனங்கள், பால் கூட்டுறவு சங்கங்கள் முன் கால்நடைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தோ்தல் நடத்த வேண்டும். உற்பத்தியாளா்களுக்கு மானியமாக ரூ. 3 என்பதை பிற மாநிலங்களைப் போல ரூ. 5-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.ராமகவுண்டா், விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன், தமிழக பால் உற்பத்தியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் வி.அனுமந்தராசு மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT