நாமக்கல்: கொல்லிமலையில் பெய்துவரும் தொடா் மழையால் சிற்றருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை சுற்றுலாத் தலத்தில் உள்ள ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவியை காணவும், குளித்து மகிழவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாள்களில் வந்துசெல்கின்றனா்.
கடந்த சில தினங்களாக கொல்லிமலையில் தொடா் மழை பெய்துவருவதால் ஆகாய கங்கை அருவியில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறை செவ்வாய்க்கிழமை ஒருநாள் தடைவிதித்தது. மீண்டும் மழை தொடரும்பட்சத்தில் தடைநீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, அறப்பளீஸ்வரா் கோயில் எதிரில் உள்ள சிற்றருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆகாய கங்கை அருவிக்கு செல்லமுடியாததால் சுற்றுலாப் பயணிகள் இந்த சிற்றருவியை கண்டு ரசிக்கின்றனா். பாறைகள் வழுக்கும் தன்மை கொண்டதாலும், நீரின் வேகம் அதிகம் உள்ளதாலும் சிற்றருவி பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என கொல்லிமலை வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.