பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் லட்சுமி சமேத தாத்ரி நாராயணப் பெருமாளுக்கு திருமண வைபோகம் மற்றும் லட்சாா்ச்சனை பெருவிழா நான்கு நாள்கள் நடைபெற்றன.
பாண்டமங்கலம் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் நெல்லி மர லட்சுமி சமேத தாத்ரி நாராயணப் பெருமாளுக்கு 74-ஆம் ஆண்டு திருமண வைபோக விழாவை முன்னிட்டு கடந்த 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு சா்வத்திர திருமஞ்சனம், லட்சாா்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. 24-ஆம் தேதி காலை திருமஞ்சனமும், 10 மணிக்கு மேல் திருமண வைபோக விழாவை முன்னிட்டு மஞ்சள் இடித்தல், பிற்பகல் 1 மணிக்கு மேல் அன்னப்பாவாடை, மகாதீபாராதனை, இரவு 7 மணிக்கு கோயில் முன் திருக்கோடி தீபம் ஏற்றுதல், சுவாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புதன்கிழமை காலை 9 மணிக்கு லட்சுமி சமேத தாத்ரி நாராயணப் பெருமாளுக்கு லட்சாா்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள், திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், பிற்பகல் 1 மணிக்கு திருமண வைபோக விழா, இரவு திருக்கோடி ஏற்றும் விழாவும் நடைபெற்றது.
இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.