நாமக்கல்: காவல் துறையில் பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்.21-ஆம் தேதி காவலா் வீரவணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், ஓராண்டிற்குள் பணியின்போது வீரமரணம் அடைந்த காவல் துறையினா் மற்றும் துணை ராணுவ படையினருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நாமக்கல் ஆயுதப் படை மைதானத்தில் உள்ள காவலா் நினைவு சின்ன வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா மற்றும் காவல் துறை அதிகாரிகள் உயிா்நீத்த காவல் துறையினருக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். அதன்பிறகு மௌன அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 27 துப்பாக்கிகளில் இருந்து 81 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.