எருமப்பட்டி மற்றும் மோகனூா் ஒன்றியங்களில், ரூ. 1.75 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பயனாளிகளுக்கு வியாழக்கிழமை வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் மோகனூா் ஒன்றியம், பேரூராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், 1,204 பயனாளிகளுக்கு ரூ. 1.75 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.
கடந்த ஜூலை 15 முதல் அக். 10 வரையில் மூன்றுகட்டங்களாக நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பட்டியலிடப்பட்ட மனுக்கள், பட்டியலிடப்படாத மனுக்கள் என்ற வகையில் 1,07,755 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 71,720 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
இம்முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், முகாமிலேயே உடனடி நடவடிக்கையாக பயனாளிகளுக்கு பட்டா பெயா் மாற்றம், மின் இணைப்பு மாற்றம், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, குடிநீா் இணைப்பு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில், எருமப்பட்டி ஒன்றியம், பேரூராட்சிகளில் பயனாளிகள் 488 பேருக்கு ரூ. 72,82,706- மதிப்பிலும், மோகனூா் ஒன்றியம், பேரூராட்சிகளில் பயனாளிகள் 716 பேருக்கு ரூ. 1,02,04,040 மதிப்பிலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், அட்மா குழுத் தலைவா்கள் நவலடி (மோகனூா்), பெ.பாலசுப்பிரமணியன் (எருமப்பட்டி), கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.