பாண்டமங்கலம் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள கோப்பணம்பாளையம், தன்னாசி கோவில்மேடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி. இவரது மனைவி பரமேஸ்வரி. இவா்களுக்கு அருண்குமாா், தனசீலன் (25) என இரண்டு மகன்கள். திருமணமாகாத தனசீலன் கூலி வேலை பாா்த்து வந்தாா். இவா் தினமும் மது அருந்திவிட்டு வருவதால், அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்த தனசீலன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அருகில் வசிக்கும் பூபதி வீட்டுக்குள் சென்று பாா்த்தாா்.
அப்போது, தனசீலன் தூக்கிட்டுத் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவா், தனசீலனை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், தனசீலன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
புகாரின்பேரில், வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.