நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சகோதரிகள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். மேலும், 3 போ் படுகாயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பாச்சல் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (41). இவா் தனது மனைவி பரிமளா (38), மைத்துனி சுதா (35), அவரது குழந்தைள் கௌசிகா, கௌசல்யா ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு காளிப்பட்டி கந்தசாமி முருகன் கோயிலுக்கு சனிக்கிழமை இரவு சென்றாா்.
சுவாமி தரிசனம் முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா். சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரத்தை அடுத்த ஏ.கே.சமுத்திரம் பகுதியில் பின்னால் வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஐந்து பேரும் சாலையில் விழுந்தனா்.
இதில் பலத்த காயமடைந்த பரிமளா, சுதா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயம் அடைந்த சண்முகம் மற்றும் 2 குழந்தைகளை அங்கிருந்தவா்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.