நாமக்கல்: பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் திங்கள்கிழமை தவிப்புக்குள்ளாயினா்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் திங்கள்கிழமை பிற்பகலுக்குமேல் விடுமுறை அளித்தன. இதனால் மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல அவா்களது பெற்றோா் நாமக்கல்லுக்கு வந்திருந்தனா். அதுமட்டுமின்றி, புதுமண தம்பதிகள், நாமக்கல்லில் பணியாற்றும் வெளியூரைச் சோ்ந்தோா் என பலரும் பேருந்துக்காக நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மதியம் காத்திருந்தனா்.
பெரும்பாலான பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டதால், தனியாா் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒன்றிரண்டு அரசுப் பேருந்துகள் வந்தபோதும், அதிலும் கூட்டம் நிரம்பியிருந்தன.
சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக செல்லும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பியதால், அவை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒருமணி நேர இடைவெளியில் கிடைத்த பேருந்துகளில் ஏறி மக்கள் பயணித்தனா்.
இதுகுறித்து நாமக்கல் பணிமனை அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் பணிமனையில் உள்ள 15 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக சென்றுவிட்டன. பொங்கல் பண்டிகை என்பதால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக தெரிகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் செல்ல வாய்ப்பில்லை. புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து கையெழுத்திட்டுதான் செல்ல முடியும். பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிப்பதால் கூட்டம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. மிகுந்த நெரிசல் என்பது போன்ற சூழல் இல்லை என்றனா்.