கள் இறக்குவதற்கான தடையை நீக்கி, தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்கும் கட்சிக்குதான் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆதரவு என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவா் வேலுசாமி தெரிவித்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்திக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா் கூறியதாவது: தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அதிக அளவில் திறந்துவிட்டு, இயற்கை பானங்களான தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து இறக்கப்படும் கள்ளுக்கு தடை விதித்துள்ளது. அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கள் இறக்க தடையில்லை.
தமிழகத்தில் தடையை நீக்க கோரிக்கை விடுத்தும், இதுவரை அரசு செவிசாய்க்கவில்லை. இதனால் கடந்த ஆண்டுகள் இறக்கியதை பொறுத்துக் கொள்ளாமல், என்மீது பரமத்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கள்ளுக்கான தடையை நீக்கும் கட்சிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என்றாா்.
அப்போது, இளம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் செளந்தரராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இளவரசன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனா்.