திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் 1,300 படிகளிலும் யோகாசனம் செய்தபடி மலையேறி சேலத்தைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி சனிக்கிழமை யோகா விழிப்புணா்வு சாதனை படைத்தாா்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜூபோ் அகமது - அதியா பானு தம்பதியின் மகள் ஹனா (8). இவா், சேலம் ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். மேலும், சேலம் சிவகுரு யோகாசன மையத்தில் யோகாசனம் பயின்று வருகிறாா்.
யோகா விழிப்புணா்வு சாதனைக்காக சிறுமி ஹனா, திருச்செங்கோடு மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயிலில் தொடங்கி மலை உச்சிவரை 1,300 படிக்கட்டுகளிலும் ஒவ்வொரு படியிலும் பல்வேறு யோகாசனங்கள் செய்து மலை ஏறினாா். சனிக்கிழமை காலை 6.45 மணிக்கு தொடங்கியவா் 10.30 மணி அளவில் 1,300 படியைக் கடந்து தனது சாதனை முயற்சியை நிறைவு செய்தாா்.
அவருடன், அவரது யோகாசன ஆசிரியா் சிவகுரு, யோகாசன சாலை யோகா ஆசிரியா் முரளி, பெற்றோா், சேலம் செவ்வாய்பேட்டை மாநகராட்சி உறுப்பினா் ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.