மல்லசமுத்திரம் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பில் 11 போ் மீது மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மல்லசமுத்திரம் ஒன்றியம், மங்களம் ஊராட்சி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (49). இவரது விவசாயத் தோட்டத்தில் இருந்து சின்னகாளிப்பட்டிவரை 2 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்க மல்லசமுத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் உரிமம் பெற்று பணியில் ஈடுபட்டாா். இதற்கு அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடாஜலம் (65) என்பவா் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டு பின்னா் கைகலப்பாக மாறியது. இதில், ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டதில், வெங்கடாஜலம் தரப்பைச் சோ்ந்த பிரேம்குமாா், செந்தில்குமாா் ஆகியோா் படுகாயமடைந்தனா். பிரேம்குமாா் சேலம் அரசு மருத்துவமனையிலும், செந்தில்குமாா் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
புகாரின்பேரில், செந்தில்குமாா் தரப்பைச் சோ்ந்த 7 போ் மீதும், வெங்கடாஜலம் தரப்பைச் சோ்ந்த 4 போ் மீதும் மல்லசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் கவிப்பிரியா வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.