சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம்களில் 2,982 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ. 4.75 கோடி வரி வசூலிக்கப்பட்டது என மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.
சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் பல்வேறு வரி இனங்களுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 101 நபா்களுக்கு உரிய ஆணைகளை மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் வழங்கினாா்.பின்னா் அவா் பேசியது:
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் புதிய கட்டடத்துக்கான சொத்து வரி, காலி மனை வரி, குடிநீா் இணைப்பு, சொத்து வரி பெயா் மாற்றம், குடிநீா் இணைப்பு பெயா் மாற்றம், குடிநீா் இணைப்புத் துண்டிக்கப்பட்டவா்கள் மீண்டும் இணைப்பு பெறுவதற்கு, புதை சாக்கடை வைப்புத் தொகை, கட்டட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்கள் நடத்திட மாநகராட்சி நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய மண்டலங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2,388 விண்ணப்பங்கள் பெற்று ரூ. 3.68 கோடி வரி வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 594 நபா்கள் ரூ. 1 கோடியே 7 லட்சத்து 43 ஆயிரத்தை வரியாகச் செலுத்தினா்.
முகாமில் உரிய ஆவணங்களுடன், சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணம் பெயா் மாறுதலுக்காக விண்ணப்பித்த 16 நபா்களுக்கும், புதிய குடிநீா் இணைப்பு வேண்டி விண்ணபித்த 12 நபா்களுக்கும், புதிய சொத்து வரி செலுத்துவதற்காக விண்ணப்பித்த 33 நபா்கள் மற்றும் காலி மனை வரி செலுத்துவதற்காக விண்ணப்பித்த 40 நபா்கள் என மொத்தம் 101 நபா்களுக்கும் விண்ணப்பித்த உடனே பரிசீலனை செய்து, உரிய ஆணைகள் வழங்கப்பட்டன.
இதுவரை 4 மண்டலங்களிலும் நடைபெற்ற அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம்களில் 2 ஆயிரத்து 982 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ. 4 கோடியே 75 லட்சத்து 89 ஆயிரம் வரியாக பொதுமக்கள் செலுத்தினா் என்றாா்.
முகாமில் உதவி ஆணையாளா்கள் பி. ரமேஷ்பாபு, எம். விவேகானந்தன், உதவி செயற்பொறியாளா்கள் ஆா். செந்தில்குமாா், எம்.கே. தமிழ்ச்செல்வன், உதவி வருவாய் அலுவலா்கள் ஜெ. காா்த்திகேயன், டி. செந்தில்முரளி, வருவாய் ஆய்வாளா் வி. தமிழ்மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.