சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் 25 வருடமாக தேனீர்க்கடையை நடத்தி வந்தவர், கரோனா ஊரடங்கால், தனது வியாபாரத்தை காய்கறிக்கடையாக்கினார்.
தம்மம்பட்டி உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் மணி(50), இவர் தம்மம்பட்டியில் குரும்பர்த்தெரு, திருச்சி பிரதான சாலை, கடைவீதி தொடக்கப்பகுதிகளில் டீக்கடையை நடத்திவந்தார். கரோனா ஊரடங்கால், மார்ச் மாதம் முதல் டீக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது வரை தொடர்ந்து இருமாதங்கள் தொழில் இல்லாமல் அவதிப்பட்டுவந்தார்.
அதன் அரசு அனுமதி வழங்கிய நாளில் மீண்டும் தனது டீக்கடையை ஆரம்பித்தவர், கரோனா பயத்தால், மக்கள் டீக்குடிக்க பெரிதாக யாரும் வரவில்லை. வருமான இழப்பு ஏற்பட்டது. காவல்துறையினரும், பேரூராட்சியினரும் டீக்கடையை அரசு அறிவித்த நேரத்திற்கு மேல் நடத்தவிடுவதில்லை. இதனால் வாங்கிய பால் அனைத்தும் வீணாகும் சூழல் ஏற்பட்டது. இதனால், டீக்கடை மணி, தனது வியாபாரத்தை, தற்போது அனைவருக்கும் அத்தியாவசியமாக உள்ள காய்கறிக்கடையாக்கினார்.
இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் மணி தம்பதியினர் கூறியது, 25 வருடமாக டீக்கடை நடத்தி வந்தோம். தினமும் பத்து லிட்டர் பால் மூலம் வியாபாரம் நடந்தது. மாலை 5 மணிக்கு மேல்தான் எண்ணெய் பலகாரங்கள் நன்றாக விற்பனையாகும். அரசு உத்தரவுப்படி மாலை 5 மணிக்கு கடையை மூட வேண்டும் என்பதால், தினமும் மூன்று லிட்டர் பாலுக்குரிய தேனீர் மட்டும் விற்பனையானது. இது பெருத்த வருமான இழப்பு.பலகாரங்கள் விற்பனையாகும் மாலை நேரமும் தடை செய்யப்பட்ட நேரமானது.
அதனால், தொழிலை மாற்றிவிடலாம் என்று கருதி, அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமிக்க காய்கறித் தொழிலை செய்வது என்று முடிவெடுத்தோம். அருகில் உள்ள காய்கறி மண்டிகள் மூலம் காய்கறிகளை வாங்கிக்கொள்கிறோம். 25 வருட டீக்கடையை விட்ட கவலை இருந்தாலும், காய்கறித்தொழில் மனதிற்கு மகிழ்ச்சியானதாக இருக்கின்றது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.