சேலம்

சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முடிவு - முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

DIN

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு, நீதிமன்ற அனுமதி பெற்று சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
 சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தலைவாசலில் ரூ. 1,022 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேசத் தரத்திலான கால்நடை பூங்காவின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். அதன்பின், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
 தலைவாசலில் தற்போது அமைக்கப்பட்டு வரும் கால்நடைப் பூங்கா மூலம் நமது நாட்டு இன மாடுகள், நாய்கள், கோழிகள் அழியாமல் பாதுகாக்கப்படும்.
 உலகம் முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரோனா தீநுண்மித் தொற்றுக்கு இதுவரை எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் அரசின் துரித நடவடிக்கையால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.
 நோய் வந்தவர்களைக் குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் எனக் கூறாமல், அரசின் நடவடிக்கைகளை மட்டுமே திமுக தலைவர் ஸ்டாலின் குறை சொல்லி வருகிறார். நாளை நடைபெறும் மருத்துவக் குழுவினரின் ஆலோசனைக்குப் பின்னரே பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து அறிவிக்கப்படும்.
 சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்லிடப்பேசி கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் மீது அவர்கள் கடையை மூடுவது தொடர்பாக காவலர்களுடன் ஏற்பட்ட பிரச்னையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர்.
 இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை மேற்கொண்டு மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரிக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.
 எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அரசின் முடிவு தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
 இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.மருதமுத்து, ஆர்.எம்.சின்னதம்பி, குமரகுரு, பிரபு, கு.சித்ரா, மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT