சேலம்: பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா் முகாமில் பெறப்பட்ட 81 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சி.அ. ராமன் உத்தரவிட்டாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பழங்குடியினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, கருமந்துறை உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமனிடம் வழங்கினாா்.
பழங்குடியினருக்கான இச் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்தும், சாலை வசதிகள் வேண்டியும், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, சுயத் தொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை மற்றும் கடனுதவி வேண்டியும், இலவச வீட்டுமனைப் பட்டா, வன உரிமைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 81 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், துறை அலுவலா்களிடம் வழங்கி அனைத்து மனுக்களுக்கும் துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீா்வு காண வேண்டும் என உத்தரவிட்டாா். கூட்டத்தில் கூடுதல் இயக்குநரும், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான நா. அருள்ஜோதி அரசன், மாவட்ட வன அலுவலா் அ. பெரியசாமி, சேலம் கோட்ட வன அலுவலா் (சமூக காடுகள் கோட்டம்) எஸ். பிரபா, திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) பி. சுகந்தி பரிமளம் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.